முருகனா இல்லை முனியப்பனா?

May 14, 2024 - 12:31
 10
முருகனா இல்லை முனியப்பனா?

சேலம் அனைமேடு பகுதியில் உள்ள ராஜமுருகன் கோவிலில் 56அடி உயரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட முருகன் சிலை முனியப்பன் உருவத்தில் இருப்பதாக மக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த முருகன் சிலை விவகாரம் தற்போது பெரும் பேசும்பொருளாக உருவெடுத்திருக்கிறது.

சேலம் இரும்பாலை அருகே உள்ள அனைமேடு பகுதியில் அமைந்துள்ளது ராஜமுருகன் திருக்கோவில். அக்கோவிலை நிர்வகித்து வரும் வெங்கடாச்சலம் என்பவர் இங்கு பிரமாண்டமான முருகன் சிலையை நிறுவ வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், தனது நீண்ட கால கனவை நிறைவேற்ற வேண்டுமெனவே இந்த கோவிலில் முருகன் சிலையை வடிவமைக்க திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சுற்றுப்புர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

கடந்த ஓராண்டாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 3 பக்கமும் சிறைச்சீலை அமைத்து 6 மாத காலமாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு இதன் பணிகள் முடிவடந்தது.

இதனையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த சிலை திறக்கப்பட்டது. அப்போது இந்த சிலையை பார்த்த பக்தர்கள் அதிச்சி அடைந்தனர். முருகன் சிலையின் முக அமைப்பும், உடல் அமைப்பும் சரியில்லை என்றும் முனீஷ்வரன் உருவ அமைப்பில் முருகன் சிலை உள்ளதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

வரும் 19ம் தேதி நடைபெறும் கோவில் குடமுழுக்கு விழாவுக்காக முருகன் சிலை வடிவமைக்கப்பட்ட நிலையில் முருகனா இல்லை முனியப்பனா என்ற சர்ச்சையில் குடமுழுக்கு விழாவை ஒத்தி வைத்திருக்கிறது கோவில் நிர்வாகம். வேறொரு சிற்பி மூலம் முருகன் சிலையில் முகத்தை சீரமைத்து அதன் பின்னர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

முனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் சிலையை மட்டுமே செய்து வந்த சிற்பி முதல்முறையாக முருகன் சிலையை வடிவமைத்ததால் தான் இந்த குளருபடி ஏற்பட்டுள்ளதாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த சிலையை செய்வதற்காக கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.