நாட்டையே நிலை குலைய வைத்த பாலியல்; ப்ரீ ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடந்த அட்டூழியங்கள் – வலுக்கும் போராட்டம்!

84 ப்ரீஸ்கூல்கள், 20 தொடக்கப் பள்ளிகள், 10 பகல்நேரப் பராமரிப்பு மையங்களில்

May 27, 2026 - 16:01
 3
நாட்டையே நிலை குலைய வைத்த பாலியல்; ப்ரீ ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடந்த அட்டூழியங்கள் – வலுக்கும் போராட்டம்!

நாட்டையே நிலை குலைய வைத்த பாலியல்; ப்ரீ ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடந்த அட்டூழியங்கள் – வலுக்கும் போராட்டம்! 

பிரான்ஸ் நாட்டின் அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகள் மீது நடந்த பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்கொடுமை சம்பவங்கள் அந்த நாட்டையே நிலை குலைய செய்துள்ளது.

குறிப்பாக மூன்று வயது குழந்தைகள் கூட இந்த கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, மனித உரிமை அமைப்புகளையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் முழுவதும் உள்ள 84 ப்ரீஸ்கூல்கள், சுமார் 20 தொடக்கப் பள்ளிகள் மற்றும் கிட்டத்தட்ட 10 பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை, குழந்தைகள் தூங்கும் நேரம், பள்ளி முடிந்த பிறகான நேரங்களில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள பள்ளி ஊழியர்களே செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மிக முக்கியமாக 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே 78 உதவியாளர்களை பாரிஸ் இடைநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரிஸ் நகரத்தின் தலைமை அரசு வழக்கறிஞரான லாரே பெக்குவா இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்,

அதில் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் நடந்ததாக கூறப்படும் ப்ரீஸ்கூல்கள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்,

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து #MeTooEcoles என்ற கூட்டு அமைப்பை உருவாக்கியுள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த புகார்களைப் பள்ளி நிர்வாகமும் நகர அதிகாரிகளும் நீண்ட காலமாகப் புறக்கணித்து வருவதாகவும், இந்த சம்பவங்களை முழுமையாக மறைக்க முயன்றுள்ளதாகவும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.