சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் Retire ஆகுகிறாரா? | Rajinikanth | Tamil Cinema | Kollywood

Rajini Kamal,NELSON, SUNDAR C

Oct 29, 2025 - 14:02
Oct 29, 2025 - 14:03
 8
சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் Retire ஆகுகிறாரா? | Rajinikanth | Tamil Cinema | Kollywood

சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் Retire ஆகுகிறாரா? | Rajinikanth | Tamil Cinema | Kollywood 

இந்தியத் திரையுலகின் இருபெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பல வருடங்களாக ரசிகர்கள் கனவு கண்ட இந்த இணைப்பு, தற்போது உறுதியான திசையை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. இந்தப் பிரம்மாண்ட கூட்டணியை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் எனவும், மேலும் இந்தப் படமே ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் கடைசிப் படமாக அமையக்கூடும் எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருவது ரசிகர்களை ஒரே நேரத்தில் உற்சாகத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெவ்வேறு மேடைகளில் இந்தப் புதிய படம் குறித்து பேசியதன் மூலம், அவர்கள் இருவரும் மீண்டும் திரையில் இணையப் போவதை உறுதி செய்திருந்தனர். ஆரம்பத்தில் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியானாலும், கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்று ரஜினிகாந்த் பின்னர் தெளிவுபடுத்தினார். தற்போது வந்துள்ள புதிய தகவல்களின்படி, 'ஜெயிலர்' படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நெல்சன் சொன்ன ஒன்லைன் கதை ரஜினிகாந்துக்குப் பிடித்துப் போனதாகவும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நெல்சன், 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பை முடித்து, அதை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதற்குப் பிறகு, ரஜினி-கமல் படத்துக்கான முழுமையான கதையை எழுதி, ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடிக்க அவர் சுமார் ஒரு வருடம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தும் விதமாக, ரஜினிகாந்த் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கக்கூடிய ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், அடுத்த ஆண்டு தீபாவளி 2026 அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கமல்ஹாசன் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்கள் படங்களை முடித்து வரும்போது, நெல்சன் தனது திரைக்கதையை தயார் செய்திருப்பார் என்றும், இந்தக் கனவுப் படத்தின் படப்பிடிப்பு 2027ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுந்தர் சி - ரஜினி படம், அன்பறிவ் - கமல் படம், மற்றும் ரஜினி-கமல்-நெல்சன் இணையும் படம் என இந்த மூன்று படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் கடைசி இரண்டு படங்களாக, சுந்தர் சி இயக்கும் படம் மற்றும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி-கமல் இணையும் படமே இருக்கும் என்பதுதான். தக் லைஃப் படத்தின் மூலம் தனது நண்பர் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் நோக்கில், தனது கடைசிப் படங்களை அவரது தயாரிப்பிலேயே நடித்துக் கொடுக்க ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படங்களோடு அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலே. இதற்கு முன்பும் பலமுறை ரஜினிகாந்தின் கடைசி படம் குறித்து பல வதந்திகள் வந்துள்ளதால், இந்தத் தகவலும் ஒரு வதந்தியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரஜினி - கமல் இணையும் இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத முக்கியப் படைப்பாகவும், சூப்பர் ஸ்டாரின் புகழுக்கு மணிமகுடமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.