அதிமுக உள்கட்சி மோதலுக்கு இடையே மீண்டும் இணைந்த அணிகள்… அரசியல் வட்டாரங்களில் எழும் கேள்விகள்!
முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது
அதிமுக உள்கட்சி மோதலுக்கு இடையே மீண்டும் இணைந்த அணிகள்… அரசியல் வட்டாரங்களில் எழும் கேள்விகள்!
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதலுக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி அணிகள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. இதனால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்த நிலையில், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் தற்போது 40 ஆக குறைந்துள்ளது. இந்த சூழலில் கட்சிக்குள் மேலும் உடைப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்று சந்திப்பு நடத்தியது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக பிளவுக்கு பிறகு முதல்முறையாக ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
ஆனால் இந்த சந்திப்பில் சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மட்டும் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவனும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவையில் முன்பு அளிக்கப்பட்டிருந்த புகாரை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் விரைவில் சபாநாயகரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் ஏற்பட்டிருந்த அதிகாரப்போருக்கு தற்காலிக முடிவு காணப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அதேசமயம், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள், த.வெ.க-வில் இணைந்தது மற்றும் அதிமுகவின் பலம் குறைந்திருப்பது கட்சிக்குள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி அணி மீண்டும் ஈபிஎஸ் தரப்புடன் இணைந்திருப்பது, எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முக்கிய முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
