ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி பலி!
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் குமரன் (53). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் போருர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே இன்று பிற்பகல் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து அதி வேகமாக வந்த மற்றொரு பைக் குமரன் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் மீது வேகமாக பைக்கில் வந்து மோதிய வர் பலத்த காயங்களுடன் நீக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ்காரர் குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.