அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை!
அசாமில் மாநில அரசு வேலை குறித்து புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதன்படி அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த தகவலை தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மற்ற மாநிலங்களில் இருந்து அசாம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை பழங்குடியினராக அங்கீகரிக்க சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதாகவும், இதனால் சட்டவிரோதமாக அசாமில் குடியேறுவதை தடுக்கலாம் எனவும், மேலும், பழங்குடியின மக்களின் நலன்களை பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அசாம் மாநிலம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.