திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் நலன் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றன
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
தி.மு.க. அரசு மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ரயிலடி தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் நலன் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
'முன்னேர் எப்படியோ, பின்னேரும் அப்படியே' என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பணியாற்றுவதற்காக பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க.-வைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையில், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டு வருவதோடு, பல்வேறு மக்கள் விரோதச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறுவகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடைமாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் ஸ்டாலினின் தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில், 8.1.2025 (புதன் கிழமை) காலை 10 மணியளவில், ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தி.மு.க. அரசு மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.