2-ம் கட்ட பிரச்சாரம் தீவிரம் – 29ல் தேர்தல்!
92 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன
2-ம் கட்ட பிரச்சாரம் தீவிரம் – 29ல் தேர்தல்!
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 44,376 வாக்குச்சாவடிகளில் 92 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது மேற்கு வங்காள தேர்தல் வரலாற்றில் மிக உயர் வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்நிலையில், வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன் என்று உறுதியாக அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியை கைப்பற்றுவேன். அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம் நான் இதைச் செய்வேன்.
பாஜகவால் எங்களை தோற்கடிக்க முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “நான் வங்கத்தில் பிறந்தேன். இந்த வங்கத்திலேயே என் இறுதி மூச்சையும் விடுவேன்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக விமர்சித்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் கங்கை நதி தூய்மையாக உள்ளதால் பிரதமர் மோடி அதில் படகு பயணம் செய்தார்.
அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மிக மோசமாக மாசடைந்துள்ள யமுனை நதியில் இறங்கி பிரதமரால் ஒருமுறை குளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மம்தாவின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
டெல்லியைக் குறிவைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மம்தா, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிரணியை உருவாக்கும் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
