இந்தியர்கள் உடல் தாயகம் கொண்டுவர ஏற்பாடு! மத்திய இணையமைச்சருடன் மோடி ஆலோசனை!
குவைத் நாட்டுக்கான இந்திய தூதரை சந்தித்து, விவரங்களை கேட்டறிந்தார் மத்திய இணையமைச்சர். உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்திக்கிறார் மத்திய இணையமைச்சர்.
நேற்றே தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 49 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் அல்-அடான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குவைத் சென்றுள்ளனர். இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவிற்குள் : +91 1800 309 3793
வெளிநாடு : +91 80 6900 9900, +91 80 6900 9901