அறிவிப்பு வெளியிட்ட அப்பாவு! கூட்டத்தொடரில் எடுக்கப்போகும் முடிவு!

Jun 13, 2024 - 01:24
Sep 9, 2024 - 23:26
 8
அறிவிப்பு வெளியிட்ட அப்பாவு! கூட்டத்தொடரில் எடுக்கப்போகும் முடிவு!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜுலை 10ம் தேதி நடைபெறுவதால் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதி முன்னதாகவே தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் எனவும் பேரவை கூட்டம் சுமார் 25 நாட்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 14ம் தேதி தொடங்கும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முந்தினம் அறிவித்தது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முந்தினம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து பேசிய அப்பாவு, வருகிற 24ம் தேதி நடைபெறுவதாக அறிவித்த சட்டப்பேரவை கூட்டம் முன் கூட்டியே, அதாவது வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். இன்று காலை 11 மணி அளவில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏவாக பதவியேற்கிறார். சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை தலைவர் அலுவலகத்தில் நான் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன். 12மணிக்கு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, வருகிற 20ம் தேதி முதல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ளலாம் எந்தெந்த தேதியில் எனென்ன மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.