வழிபாடு மேற்கொண்ட அமித்ஷா! திருப்பதி செல்ல உள்ளார்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் கோயிலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதற்காக வாரணாசியிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்திரங்கிய அமித்ஷா பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்கிய அமித்ஷா தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பாஜக பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோருடன் சாலை மார்க்கமாக சுமார் 9 கிலோமீட்டர் தூரம் பயணித்து திருமயத்திற்கு சென்று அங்கு உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
மேலும் தேய்பிறை அஷ்டமியான இன்று கோட்டை பைரவரை வழிபட்டால் வேண்டிய காரியம் நிறைவேறும் துன்பம் நீங்கும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல் வழக்கமாக இந்த கோயிலில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வழிபட்டு சென்றால் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது.
மேலும் அமித்ஷா வருகை தந்ததை முன்னிட்டு மூன்று கோயில்களிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொள்ள கோயில்களில் பொதுமக்களுக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக கோட்டை பைரவர் கோயில் அருகே இருந்த நான்கு கடைகள் பாதுகாப்பு காரணத்தால் அடைக்கப்பட்டது. மேலும் கோட்டை பைரவர் கோயிலில் அமிதா சாமி தரிசனம் மேற்கொண்ட சுமார் 20 நிமிடம் வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் அமித்ஷா அங்கிருந்து திருப்பதி செல்ல உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த அமித்ஷா இந்த கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அன்றைய தினம் மழையால் அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.