ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணி ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது

Jan 28, 2025 - 11:16
Jan 28, 2025 - 11:50
 12
ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இரும்பின் தொன்மை’ என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதுவிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது.

டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது. திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மூர்த்தியின் வழியாக என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்களுடைய பாராட்டுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்தனர்.

இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்பதால் தமிழ்நாட்டின் முதல்வரான உங்களில் ஒருவனாக நான் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று மறுநாளே குடியரசு நாளான ஜனவரி 26 அன்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியமே மதுரைக்கு புறப்பட்டேன்.

அரிட்டாபட்டியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாபெரும் வரவேற்பு அளித்தனர். பாராட்டுகளைக் குவித்தனர். அவர்களிடம் உரையாற்றிய நான், இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தன்னுடைய கருத்தை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழ்நாட்டின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன்.

அவர்கள் அதனை முழு மனதுடன் வரவேற்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மதுரை மக்களுக்காக அதனை அமைச்சர் மூர்த்தி முன்னெடுத்துச் சிறப்பாகச் செயல்படுத்தி, திராவிட மாடல் அரசின் வெற்றிக்கு துணை நின்று இருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி, கலைஞரின் உயிரோடு கலந்த உடன்பிறப்புகளான உங்களையும் சந்தித்து மகிழ்வேன்

ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.