சைபர் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்! பேஜர் வெடிப்பின் பின்னணி Lebanon Pager Explosion

Sep 20, 2024 - 23:56
 12
சைபர் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்! பேஜர் வெடிப்பின் பின்னணி Lebanon Pager Explosion

சைபர் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்! பேஜர் வெடிப்பின் பின்னணி Lebanon Pager Explosion

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவளித்து வருகிறது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனம்!

ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், லெபனானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை தாக்குவதற்காக  இஸ்ரேல் திட்டமிட்டது. மேலும் லெபனானில் உள்ள  ஹிஸ்புல்லா இயக்கம் செல்போன் பயனடுத்தினால் இஸ்ரேல் 'ஹேக்' செய்து விடுகிறது என்பதால் பழைய தொழில்நுட்பமான 'பேஜர்' என்னும் தகவல் தொடர்பு மின்னணு சாதனத்தை  பயன்படுத்தினார்கள். இதற்கென ரகசிய பேஜர் நெட்வொர்க் வைத்திருந்தனர்.

வெடித்து சிதறிய பேஜர்!

இந்த நிலையில், தகவல் அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட பேஜர் என்னும் மின்னணு சாதனம் வெடித்து சிதறி உள்ளது. மேலும் தீவிரவாதிகள் மட்டுமின்றி மக்களின் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பேஜர்கள், லெபனான் மட்டுமின்றி அண்டை நாடான சிரியாவிலும் வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் உள்பட சில பேர் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி மக்களின் பேஜர்களும் திடீரென வெடித்ததால் மொத்தம் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பேஜர்களை பயன்படுத்துவோர், அதனை உடனடியாக தூக்கி எறியுமாறு லெபனான் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேலின் சைபர் தாக்குதல்!

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணம் இஸ்ரேலின் சதி என ஹிஸ்புல்லா கூறியுள்ளது. ஏனென்றால், இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பிரச்சனை  அதிகரித்திருக்கும் இந்த சூழலில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெடிகுண்டாக மாறிய பேஜர்!

இந்த வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாட்’ மற்றும் ‘ஐடிஎஃப்’ ஆகியவற்றின் தொடர்புகள் இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5,000 பேஜர்களில் சிறிய அளவிலான வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் பேஜரை வெடிக்க வைத்து, சைபர் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்ப சாதனமாக பயன்படுத்தும் பேஜர், தற்போது வெடிகுண்டாக மாறி பலரது உயிரை பலி கொண்டது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.