பதற்றத்தின் உச்சத்தில் நேபாளம்… பற்றி எரியும் போராட்டம்!

பற்றி எரியும் நேபாளம்

Sep 10, 2025 - 14:51
 4
பதற்றத்தின் உச்சத்தில் நேபாளம்… பற்றி எரியும் போராட்டம்!

பதற்றத்தின் உச்சத்தில் நேபாளம்… பற்றி எரியும் போராட்டம்!

நேபாளத்தில் GEN Z புரட்சி தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் சர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 4ம் தேதி வரை பதிவு செய்யாமல் உள்ள பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு அந்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

GEN Z புரட்சி என அழைக்கப்படும் இந்த போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால்,  நேற்று இரவில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டது.

இதனால் போராட்டம் நிறைவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற பேராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும் காத்மாண்டுவில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், லலித்பூரில் உள்ள அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். பிரதமர் சர்மா ஒலி வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடினர்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் பிரசந்தா வீடு மீதும் போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமைச்சரவையில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் வீடுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அமைச்சர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். மேலும் பார்லிமெண்ட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பதவி விலகிய சர்மா ஒலி நாட்டை விட்டு வெளியேறி துபாய் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சந்திரா பவுடலும் பதவி விலகினார்.

வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகிய நிலையில் வன்முறை அதிகரித்து வருவதால் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.