பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பள்ளிகள் மூடல்
பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பள்ளிகள் மூடல்
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளது. இதன் தாக்கம் பல நாடுகளில் உணரப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்கள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதல் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முக்கிய வழியாகக் கருதப்படும் இந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் தடைகள் உருவாகியுள்ளன.
இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் எரிபொருள் இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்கும் நாடுகள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 321 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 335 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 16ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். கல்வி செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசு அலுவலகங்களில் எரிபொருள் செலவை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களில் பாதி பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிகளைத் தவிர பிற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனியார் நிறுவனங்களும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
