சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு | Iran Drone Attack on Saudi Arabia and Kuwait: Middle East Tensions Escalate

Mar 10, 2026 - 14:39
 4
சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு | Iran Drone Attack on Saudi Arabia and Kuwait: Middle East Tensions Escalate

சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு | Iran Drone Attack on Saudi Arabia and Kuwait: Middle East Tensions Escalate

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.

கடந்த 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீது இன்று ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல் பகுதிகளை குறிவைத்து அனுப்பப்பட்ட டிரோன், அந்நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் குவைத் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்ட 6 டிரோன்களையும் குவைத் வான்பாதுகாப்பு படை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் இருந்து ஆசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தடுக்க முயன்றால் ஈரான் மீது பல மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த போரில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், போரை எப்போது நிறுத்துவது என்பதை ஈரான் தான் முடிவு செய்யும் என்றும் அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.