உயரும் பலி எண்ணிக்கை – மதுரை அமர்வில் முறையீடு

பலி 25 ஆக அதிகரிப்பு

Apr 20, 2026 - 12:13
 4
உயரும் பலி எண்ணிக்கை – மதுரை அமர்வில் முறையீடு

உயரும் பலி எண்ணிக்கை – மதுரை அமர்வில் முறையீடு!

 

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை அமர்வில் வழக்கறிஞர் கருணாநிதி முறையீடு செய்தார்.

நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. தேர்தல் காலம் என்பதால் யாரும் அப்பகுதிக்கு சென்று பார்க்கவில்லை. உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை" எனத் வழக்கறிஞர் கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் தேவை. ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை ?” என கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசுத் தரப்பில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. முதன்மைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்என தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

பலி 25 ஆக அதிகரிப்பு: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கள் கிழமை) காலை உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.