அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்தால் கணவன் கண் முன்னே மனைவி பலியான சோகம்..
அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்தால் கணவன் கண் முன்னே மனைவி பலியான சோகம்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(44). நாகுடியில் பெட்டி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு ஜெயலட்சுமி(40) என்ற மனைவியும் தர்ஷினி(14),சபரி வாசன்(8)என்ற குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் சக்திவேல் தனது மனைவி ஜெயலட்சுமியை அறந்தாங்கியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வீட்டு கடன் பெறுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அறந்தாங்கியில் உள்ள VS. தியேட்டருக்கு பின்னால் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிரே காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி அரசுக்கு சொந்தமான TN 55 N1031 என்ற பதிவை கொண்ட பேருந்து ஒன்று வந்துள்ளது. இடது புறமாக சாலையின் ஓரம் சென்று கொண்டிருந்த சக்திவேலின் இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பின் பக்கவாட்டில் மோதியதாக தெரிகிறது. திடீரென பேருந்து மோதியதால் நிலை தடுமாறிய சக்திவேல் சாலையின் ஓரமாக விழுந்துள்ளார். அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி ஜெயலட்சுமி(40) பேருந்தின் பின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதால் அவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே கணவன் கண் முன்னே துடி,துடித்து இறந்துள்ளார். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கீழே விழுந்த சக்திவேலை தூக்கி ஆசுவாசப்படுத்தியதோடு, அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காலை வேளையில் கணவன் கண் முன்னே மனைவி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.