எழுச்சி உரையாற்றிய அண்ணாமலை! மோடி 3வது முறை ஆட்சியை பிடிப்பது உறுதி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இது தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக சார்பில் நடந்த முதல் கூட்டம் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
ஜூன் 4க்கு பிறகு இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற வேறுபாடு இருக்காது, தாமரை எப்படி விரிந்து மலர்ந்து இருக்குமோ அதே போல இந்தியா முழுவதும் பாஜக படர்ந்திருக்கும், தமிழகம் உட்பட தென் மாநிலங்களிலும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்திருப்பார்கள்.
பாஜக தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதும் , பிரதமர் மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.
அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து நரேந்திர மோடி என்ற தனிமனிதனை எதிர்த்தாலும் கூட அவர் இன்னும் பெரிய தலைவராக வளர்ந்து கொண்டே இருப்பார். பாஜக வருகின்ற ஜூன் 4ம் தேதி ஆட்சியில் அமரும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, இந்த முறை கேராளாவில் பாஜக சரித்திர வெற்றி பெறும் என்று கூறிய அண்ணாமலை அவர்கள், தெலுங்கானாவில் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தில் நம்பர் 1 கட்சியாக உருவெடுக்கும் என கூறினார். கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் எப்போதும் கனவுலகத்தில் வாழ்வார்கள், பாஜக அங்கு 28/28 என முழு வெற்றியை பதிவு செய்யும் என்றும்
ஆந்திர மாநிலத்தை பொறுத்த வரை ஜனசேனா , தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம், அதனால் அங்குள்ள 25 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் 100 கிமி தூரத்தில் இருக்க கூடிய பஞ்சாப்பில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள், இந்தியா கூட்டணியின் ஆசைகள் நிறைவேறாது.
தமிழகத்திலும் திமுகவினருக்கு எப்போதும் வருகின்ற ஆசை இந்த முறையும் வந்துள்ளது. அந்த ஆசை ஜூன் 4ம் தேதி காலை 11 மணி வரை மட்டும்தான் இருக்கும். அதுவரை அந்த கனவுலகத்தில் அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டும், ஆனால் பாஜக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.