டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு: தமிழகம் சேர்ந்த இளம் மாணவி உட்பட நால்வர் பலி
டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு: தமிழகம் சேர்ந்த இளம் மாணவி உட்பட நால்வர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் மதுபான விடுதி பகுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில், தமிழகத்தை சேர்ந்த 21 வயது இந்திய மாணவி சவிதா சண்முகசுந்தரம் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
கூட்டம் நிரம்பியிருந்த அந்த நேரத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சவிதா சண்முகசுந்தரம், ஆஸ்டினில் உள்ள மெக்கோம்ஸ் வணிகக் கல்லூரியில் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் படிப்பை நிறைவு செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கிய மாணவியாகவும், “சூப்பர் ஸ்டார்” மாணவி என்ற பெயரையும் பெற்றிருந்தார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பயங்கரவாத தொடர்புடையதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய மாணவி உயிரிழந்துள்ளதால், தமிழகம் மற்றும் இந்திய வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
