விளிம்புநிலை மக்களுக்கு கூடுதல் ரூ.2000 – முதலமைச்சர் அறிவிப்பு | MK Stalin
விளிம்புநிலை மக்களுக்கு கூடுதல் ரூ.2000 – முதலமைச்சர் அறிவிப்பு | MK Stalin
சென்னை: சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் விளிம்புநிலை மக்களுக்கு கூடுதலாக ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கோடைக்கால சிறப்பு தொகுப்பைத் தொடர்ந்து, முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் இதேபோன்ற நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதனை அரசு ஏற்று, மார்ச் மாத உதவித்தொகையுடன் இணைத்து கூடுதலாக ரூ.2000 வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, 29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு தலா ரூ.3200, 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500, மேலும் பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு தலா ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை அமல்படும் மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம், மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.8.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளித்தார்.
