இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் ஸ்டாலின் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளார்!

அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது

Apr 18, 2026 - 18:22
 3
இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் ஸ்டாலின் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளார்!

இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் ஸ்டாலின் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளார்!

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் ஸ்டாலின் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் இன்று (ஏப்ரல்18) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், வடக்கு-தெற்கு என்று நமக்குள் பிளவை ஏற்படுத்தி சண்டை மூட்டி வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி கிடைத்திருக்கிறது.பன்னிரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது. இது தொடக்கம்தான்.” என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தமிழகம் தனது அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கும் ஆன வாய்ப்பை இழந்துவிட்டது. கூடுதலாக 50% இடங்கள் உயர்த்துவதற்கு பிரதமர் மோடி வழங்கிய பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல.. ஸ்டாலின் அவர்களே ஒரு கைப்பாவையாக இருந்து, இந்த வாய்ப்பின் முக்கிய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தீர்கள்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய மதியற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது தொகுதி மறுவரையறை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும், இதனால் நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற இடங்களை இழக்கும் நிலை ஏற்படும்.

மேலும், 1998-ல், முன்னாள் முதல்வர் ஜெயலிலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது, ​​உங்களின் இப்போதைய இந்தியா கூட்டணிக் கட்சிகளே அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டன.

இந்த முறை மசோதாவை எதிர்ப்பதன் மூலம் அந்த உணர்வையே நீங்கள் சிதைத்துவிட்டீர்கள். மேலும், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.

மு. ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்த பாதிப்பையா அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா? ” என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.