திருமாவளவன் வெளியிட்ட வீடியோ – ஏமாற்றமே தொடர்கதையாகிறது, பொது தொகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது; ஆனால், அது காரணமல்ல!
விசிக தொடர்ந்து கூட்டணியில் செயல்படும்
திருமாவளவன் வெளியிட்ட வீடியோ – ஏமாற்றமே தொடர்கதையாகிறது, பொது தொகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது; ஆனால், அது காரணமல்ல!
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் ஒரு முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் திருமாவளவன் பேசுகையில்,“நமது கட்சியின் சார்பில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டு, தோழர்கள் தொகுதிவாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்கள். ஒரு சில தொகுதிகளைத் தவிர்த்து, பெரும்பாலான இடங்களில் சிறப்பான பணியை விசிகவினர் செய்துள்ளனர்.
ஆனால் சில தொகுதிகளில் தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்ற தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
நான் களப்பணி ஆற்றிய அத்தனை தோழர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.மேலும் அவர்,
ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், பலர் பொது தொகுதிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், அந்த வாய்ப்பு கிடைக்காதபோது ஏமாற்றமடைவதும் தொடர்கதையாக உள்ளது.
எனவே பொது தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுவது தவிர்க்க முடியாததாகிறது. மிகக் குறைவான இடங்களைப் பெறும் போது புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது. கட்சி வலுப்பெறும் போது, அதிகாரத்தை நோக்கி நகரும் போது, முன்னணி பொறுப்பாளர்களிடையே போட்டி அதிகரிக்கிறது. 2001-ல் நான் தேடித் தேடி ஆட்களைப் பிடித்து நிறுத்தினேன்.
2006-ல் கூட போட்டி குறைவாகவே இருந்தது. ஆனால் 2011-ல் அதிகரித்தது. 2016-ல் இன்னும் அதிகரித்தது. 2021-ல் ஒரு தொகுதிக்கு பத்து பேர் என்ற அளவுக்கு போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது ஒரு கட்டாயமாக மாறியுள்ளது.
அந்த அடிப்படையில்தான் பொது தொகுதிகளில் வெற்றி பெற்ற தம்பி ஷாநவாஸ் மற்றும் தம்பி எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு தர இயலாமல் போனது.
ஆனால் அதற்கு வேறு வேறு காரணங்களை சமூக ஊடகங்களில் பலர் சொல்கிறார்கள். அவை உண்மையல்ல” என்று தெளிவுபடுத்தினார். திருமாவளவன், திமுக கூட்டணியில் உறுதியுடன் இருப்பதாகவும், விசிக தொடர்ந்து கூட்டணியில் செயல்படும் என்றும் வலியுறுத்தினார்.
