சவுக்கு சங்கர் மீது 8வது வழக்கு! பெலிக்ஸ் ஜெரால்டு மீது 2வது வழக்கு!

May 15, 2024 - 20:17
Sep 10, 2024 - 00:15
 8
சவுக்கு சங்கர் மீது 8வது வழக்கு! பெலிக்ஸ் ஜெரால்டு மீது 2வது வழக்கு!

சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக காவல்துறை மற்றும் பெண் போலீசார் குறித்தும் அவதூறு பேசியதாக யூடூயுபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை, திருச்சி, ஊட்டி, ஆகிய மாவட்டங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கரை கைது செய்த போது அவரது காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதால் கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கோலமாவு சந்தியா என்ற தலைப்பில் இழிவாக கட்டுரை எழுதியதாக பத்திரிக்கையாளர் சந்தியா அளித்த புகாரிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கோவை எஸ்.ஐ.சுகன்யா, தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி, திருச்சி மாநகர பெண் காவலர், சேலம் பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதா, என அடுத்தடுத்து 7 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது சவுக்கு சங்கர் மீது 8 வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேட்டி கொடுத்திருப்பதாகவும் அது இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாகவும் நேதாதி பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது 8 வது வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவதூறு பேட்டியை ஒளிப்பரப்பியதாக ரெட்பிக்ஸ் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது 2வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.