ராகுல்காந்தி அமேதியில் போட்டி? கூடுகிறது காங்கிரஸ் கூட்டம்!
உத்திரப்பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது இன்று நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
அதே போன்று, ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பதும் இன்று உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
உத்திரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் நாளான மே.20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல்காந்தி அமேதியிலும் களம் காண வேண்டும் என உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் விரும்புகிறது. ஒரு வேளை ராகுல் காந்தி போட்டியிடாவிட்டால் பிரியங்கா காந்தி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி தலைமையிடம் உ.பி காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியிறுப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைவர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இந்த நிலையில், பாஜக வேட்பாளராக அமேதியில் மீண்டும் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, ரேபரேலியில் கடந்த 2006 முதல் காங்கிரஸ் எம்.பியாக இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவருடைய மகள் பிரியங்கா காந்தி அத்தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 317 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடும் அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி, மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.