போக்குவரத்துத் துறை உத்தரவு!

Apr 28, 2024 - 00:34
 7
போக்குவரத்துத் துறை உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சியானது வெளியானது. இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்து துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் விரைவு போக்குவரத்துக்கு கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஆய்வு செய்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறையானது உத்தரவிட்டிருக்கிறது.