ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல்!
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை இதற்கு முன்பு இருந்த ஆளுநர்கள் போல, இப்போதைய தமிழக ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சி பொறுப்பேற்ற அதேசமயத்தில்தான், ரவியும் கவர்னராக இங்கு பொறுப்பேற்றார்.
ஒருவேளை திமுக அரசுக்கு செக் வைப்பதற்காகவே, ஆளுநரின் இந்த நியமனம் நடந்திருக்க கூடும் என பேசப்பட்டது.
அதற்கேற்றார் போலவே, ஆளுநர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் சர்ச்சையாக தான் இருக்கிறது. ஆளுநர் - மாநில அரசுக்கு இடையே இணக்கமான போக்கும் இல்லாத நிலைமை காணப்பட்டு வருகிறது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஜனவரி மாதம் நடந்த முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ரவி, "திராவிட மாடல்", "தமிழ்நாடு" போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடவும், அதுவும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த கூட்டத்தொடர் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.
அதேபோல, கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரும் இதுபோலவே பரபரப்பை கிளப்பியது.. அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.
'இந்த அவையில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும். அதை கடைபிடிக்கவில்லை. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை. அதனால், உரையை படிக்க விரும்பவில்லை.. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை என்னால் ஏற்க முடியவில்லை" என ஆளுநர் கூறியிருந்தார். பிறகு, அரசின் உரையை வாசிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி என்று சொல்லி வெறும் 4 நிமிடங்களுக்குள் தன்னுடைய உரையை முடித்தார்.
அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்த இந்த சம்பவம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழக அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல், கவர்னர் புறக்கணித்து அவையில் உட்கார்ந்திருந்தது, தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்தது.. ஆனால், பாஜகவோ, ஆளுநருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டது. இதற்கு மறுநாளிலிருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தார்கள்..
இதைத்தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே லோக்சபா தேர்தலும் அறிவித்துவிட்டதால், சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமலேயே இருந்தன.. இப்போது, தமிழகத்துக்கு தேர்தல் முடிந்துவிட்டது.. ஜூன் 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே, அதன் பிறகு சட்டசபை கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றி அரசு முடிவெடுக்க போவதாகவும், ஜுன் 2-வது வாரமே தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் மீண்டும் கூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு ஜுன் 2-வது வாரம் கூடி எத்தனை நாட்கள் சட்டசபையை நடத்துவது எந்தெந்த தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய உள்ளதாகவும், இந்த கூட்டத்தொடர் கிட்டத்தட்டட 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
எனவே, தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு சீட் பெறப்போகின்றன? வாக்கு விகிதம் எப்படி உள்ளன என்பதெல்லாம் பொறுத்தே, சட்டசபையில் விவாதம் நடைபெறும். அந்தவகையில், தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, பாஜக என இந்த 3 கட்சிகளுக்கு நடுவே விவாதங்கள் அனலடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர, தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் அவையில் கிளப்ப தயாராகி கொண்டிருக்கின்றன எனவும் தெரிகிறது.
மேலும், தமிழகத்தின் நிஜமான எதிர்க்கட்சி நாங்கள்தான் என பாஜக கூறி வரும்நிலையில், சட்டசபையில் இந்த கட்சி என்ன செய்ய இருக்கின்றன? எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இவர்களது இருக்கை விவகாரம் எப்படியிருக்க போகிறது? உதயநிதியின் செயல்பாடு எப்படி இருக்கும்? என்பதெல்லாம், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.