முதல்முறையாக தமிழக காவல்துறை பங்கேற்று சாதனை!

May 25, 2024 - 02:05
 4
முதல்முறையாக தமிழக காவல்துறை பங்கேற்று சாதனை!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கைப்பந்து போட்டியில் முதன்முறையாக தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பேர் பங்கேற்றனர். அவர்கள் இருவரும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு இந்திய கைப்பந்து சங்க செயலாளர் தேஜ் ராஜ் சிங், தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி ஜெயராம் உள்பட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதிவரை சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டியில், இந்தியா அணி சார்பில் முதன்முறையாக தமிழக காவல்துறையின் சிறப்பு காவல் படை,13வது பட்டாலியனில் வேலைபார்க்கும் தலைமை காவலர் எஸ்.கண்ணன், சென்னை அண்ணாநகர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் எம்.கபில்கண்ணன் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இப்போட்டியில் கஜகஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி, உலகளவில் 3ம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், சர்வதேச கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியை சேர்ந்த 2 தமிழக காவலர்களுக்கும் நேற்று மாலை ஆவடி பட்டாலியன் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் முதன்முறையாக இணைந்த தமிழக காவல்துறை சேர்ந்த 13வது பட்டாலியன் தலைமை காவலர் எஸ்.கண்ணன், அண்ணாநகர் காவல்நிலைய காவலர் எம்.கபில்கண்ணன் ஆகிய 2 பேருக்கும் இந்திய கைப்பந்து சங்க செயலாளர் தேஜ்ராஜ் சிங், தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி ஜெயராம், ஐஜி சந்தோஷ்குமார் உள்பட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். சர்வதேச கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற தமிழக காவல்துறையை சேர்ந்த 2 காவலர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை தமிழக அரசு வழங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக காவல்துறை விளையாட்டு அணி வீரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.