பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

எங்களை ஆள முடியாது

Apr 18, 2025 - 18:35
 5
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

தமிழகத்திற்கான நிதியை கேட்டு அழவில்லை, எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 18) மோடிக்கு பதிலளித்துள்ளார்

திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்ஃப் சட்டத்திருத்தம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் நாம் தான் இந்திய அளவில் மத்திய அரசுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம்.

மாநில உரிமையின் அகில இந்திய முகமாக திமுக தான் இருக்கிறது. ஆனால், சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாம் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சனைகளை பேசி திசைதிருப்புவதாக சொல்கிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளோம்.

திமுகவின் பவர் என்ன என்பது பற்றி தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, நீட் தேர்வில் விலக்கு தருவேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு எவ்வளவு சிறப்பு நிதி கொடுத்திருக்கிறோம் என்று உங்களால் பட்டியல் போட முடியுமா?

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழக மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை?

சமீப நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வந்தார். எவ்வளவு நிதி கொடுத்தாலும், தமிழக அரசு அழுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசு என்ன பிச்சைக்காரர்களா? ஆளுநர் மூலமாக தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி பேசியிருக்கிறார். இப்போது நாங்கள் நிதி கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை, தமிழகத்தின் உரிமை. நான் அழுது புலம்புகிறவனும் அல்ல, ஊர்ந்துபோய் யார் காலில் விழுகிறவனும் அல்ல.

நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் நாங்கள் அமைத்துள்ள மாநில சுயாட்சிக் குழு மூலம் அனைத்து மாநிலங்களுக்காக நியாயமான உரிமையை நாங்கள் பெற்றுத் தருவோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என்று சொல்கிறேன். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ரெய்டு மூலமாக மிரட்டி ஆட்சியமைக்கும் உங்கள் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது. 2026-லும் திமுக ஆட்சி தான். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.

இங்குள்ள சிலரை மிரட்டி நீங்கள் கூட்டணி வைத்தால், ஜெயித்து விட முடியுமா? உங்கள் பரிவாரங்கள் அனைவரையும் அழைத்து வாருங்கள், ஒரு கை பார்த்துவிடலாம். தேர்தலுக்கு முன்பாக ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அமித்ஷா மட்டுமல்ல, எந்த ஷா என்றாலும் எங்களை ஆள முடியாது என்று தெரியாதுஎன்று ஸ்டாலின் தெரிவித்தார்