உலகிலேயே அதிக வளர்ச்சி…குறைந்த பணவீக்கம் உடையது இந்தியா மட்டும் தான்!

Jul 31, 2024 - 02:00
 8
உலகிலேயே அதிக வளர்ச்சி…குறைந்த பணவீக்கம் உடையது இந்தியா மட்டும் தான்!

உலகளவில் கடுமையான சூழல் ஏற்பட்ட போதிலும், உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பட்ஜெட்டிற்கு பிந்தைய நிகழ்ச்சிகளில் பிரதமர் பேசும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக உள்ளது. உலக பொருளாதாரத்தில் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கோவிட் பெருந்தொற்றை சமாளித்து நாட்டை புது உயரத்திற்கு கொண்டு சென்றோம். சர்வதேச பொருளாதாரத்தில் 16 சதவீதம் இந்தியாவினுடையது, உலக அளவில் அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் கொண்ட நாடு இந்தியா மட்டுமே. 3 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். தினமும் புதிய மைல்கல்லை இந்தியா எட்டுகிறது. சிறு குறு நடுத்தர தொழிலுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பட்ஜெட்டும் 3 மடங்கு அதிகரித்து ரூ. 48 லட்சம் கோடியாக உள்ளது. 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மூலதன செலவு ரூ.90 ஆயிரம் கோடியாக இருந்தது.

அதன் பின்னர், 2 லட்சம் கோடியாக அதிகரித்தது. தற்போது, 5 மடங்கு அதிகரித்து ரூ. 11 லட்சம் கோடியாக உள்ளது. வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட போதும், அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து உள்ளது. உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் அரசின் பணியும் செயல்களும் முன் எப்போதும் இல்லாத ஒன்று.

பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். இன்று இந்தியாவில் 1.40 லட்சம் ஸ்டார்ட் அப்கள் உள்ளன.

8 கோடி பேர் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் துவங்கி உள்ளனர்.

வளர்ந்த பாரதம் என்பது நமக்கு இன்றியமையாதது. இந்த பயணத்தில் நாடு தொடர்ந்து முன்னேறுகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் மீது முழு கவனம் செலுத்தி வருகிறோம். இதில் தெளிவான நோக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளோம். சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியா நோக்கி வருகின்றனர். இது தொழில்துறைக்கு வரும் பொன்னான வாய்ப்பு, இதனை தவற விடக்கூடாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.