இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் – முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு
24 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்

இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் – முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு
சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு 29 மாநிலங்களுக்கு தமிழக அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 24 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உட்பட ஏராளமான தலைவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்தார்.
இதன்பின் தொடங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கும் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களின் வருகை அமைந்துள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடன் உள்ளது. மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரத்தை கொண்டதே இந்தியா.
மாநிலங்கள் சுயாட்சியுடன் ஈடுபட்டாலே இந்தியாவில் கூட்டாட்சி உருவாக முடியும். இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது மாநிலங்களை பாதிக்கப் போகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள், நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரதிநிதிகளை இழக்க நேரிடும்.
இதனால் நாம் எதிர்க்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். தற்போதைய மக்கள் தொகை தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை கண்டிப்பதாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகள் குறைவதன் மூலமாக நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமையும் குறைகிறது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.