இளையராஜா பாடல்கள் நீக்கம்: ஓடிடியில் மீண்டும் 'GOOD BAD UGLY' திரைப்படம்

இளையராஜா பாடல்கள் நீக்கம்: ஓடிடியில் மீண்டும் 'GOOD BAD UGLY' திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், தற்போது சில மாற்றங்களுடன் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், இளையராஜா இசையமைத்த பிரபலமான பாடல்களான "ஒத்த ரூபாயும் தாரேன்", "இளமை இதோ இதோ", மற்றும் "எஞ் ஜோடி மஞ்சக் குருவி" ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்ற இடங்களில் வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆனால், தனது பாடல்களை முறையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ஓடிடி தளத்தில் அந்தப் பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்றதால், இளையராஜா தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக, 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஓடிடி தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. தற்போது, இளையராஜா பாடல்களுக்குப் பதிலாக வேறு இசை சேர்க்கப்பட்டு, அந்தப் படம் மீண்டும் ஓடிடியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய இசை பொருத்தமாக இல்லை என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சட்டப் போராட்டம் முடிவுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.