தமிழ்நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட்.... குட் நியூஸ் சொல்லுமா மத்திய அரசு?

ரூ.17 லட்சம் வரை வரி செலுத்த வேண்டி இருக்காது

Jan 29, 2026 - 12:36
 15
தமிழ்நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட்.... குட் நியூஸ் சொல்லுமா மத்திய அரசு?

தமிழ்நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட்.... குட் நியூஸ் சொல்லுமா மத்திய அரசு?

மத்திய பட்ஜெட்டில் இந்த முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் அதிகளவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2026 – 2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப். 1 வரும் ஞாயிற்று கிழமை  தாக்கல் செய்யப்பட உள்ளது.

வழக்கம் போல பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதே போல தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு தேர்தலும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கான பல அறிவிப்புகளும் வெளியானது.

அதே போல் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தற்போது சம்பளதாரர்களின் பெருமளவு எதிர்பார்ப்பு என்னவென்றால், தனிநபர் வருமான வரிவிதிப்பில் மாற்றங்களை தான்.

வருமான வரி உச்சவரம்பு, அதாவது, கடந்த 2014க்கு முன்பு வரை வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது.

அதன் பிறகு இது பல்வேறு சமயங்களில் உயர்த்தப்பட்டன. குறிப்பாகக் கடந்த 2024ம் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம் என்பதில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்தது.

New tax regime எனப்படும் புதிய வரி விதிப்பு முறைகளில் இருப்போர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

இந்த புதிய வருமான வரி முறையை மத்திய அரசு கடந்த 2020ல் அறிமுகப்படுத்தியது. பழைய முறை, புதிய முறை என இரண்டில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என மக்களுக்கு சாய்ஸ் வழங்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பலரும் புதிய முறையையே தேர்வு செய்தனர்.

புதிய முறையில் உச்சவரம்பு அதிகமாக இருந்தாலும் கூட அதில் சேமிப்பை ஊக்குவிக்கும் சலுகைகள் இல்லை என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் விமர்சித்து வந்தனர். அதாவது பழைய முறையில் உச்சவரம்பு குறைவாக இருந்தாலும் கூட சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரியைத் தவிர்க்கலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸுக்கு கூட வரி விலக்கு இருந்தது. ஆனால், புதிய முறையில் மிகக் குறைந்த ஆப்ஷனே இருந்தது.

இந்தியா போன்ற நாட்டில் இதுபோல திட்டங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்பதால் புதிய முறைக்கும் இத்திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கலாகும் இந்த படஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

புதிய வரி விதிப்பு முறையில் 80 சி மற்றும் 80 டி முதலீட்டுச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அறிவிப்பு வந்தால் 17 லட்சம் வரையிலான வருமானத்தில் வரி இல்லா நிலை ஏற்படும். சேமிப்பை ஊக்குவிக்க வரி செலுத்துவோரையும் ஈர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது 

மேலும், அவ்வாரே மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானால்.. சரியான முதலீடு செய்வோருக்கு ரூ.17 லட்சம் வரை வரி செலுத்த வேண்டி இருக்காது.

அதேபோல ரூ.20 லட்சம் வரை சம்பாதிப்போருக்கும் கூட தற்போதுள்ள வரிச் சுமையில் ரூ.1 லட்சம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.