உலகில் இப்படி ஒரு சுவாரஸ்ய கிராமமா? யாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

Jul 5, 2024 - 15:52
Jul 5, 2024 - 15:52
 21
உலகில் இப்படி ஒரு சுவாரஸ்ய கிராமமா? யாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

உலகில் இப்படி ஒரு சுவாரஸ்ய கிராமமா? யாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் பல சுவாரஸ்ய, நாம் முன்பு கேட்டிராத விஷயங்கள் உள்ளன. அவற்றுள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதன் மூலம் பலரும் அறிகிறார்கள். அந்த வகையில், பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதுகுறித்துதான் தற்போது பார்க்கப்போகிறோம்.
 
பிரிட்டனில் கேனாக் மில் என்ற கிராமம் உள்ளது. கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன், தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை வடிவமைத்துள்ளார். ஆன் தோர்ன் கூறுகையில், தானும், அவரது நண்பர்களும் லண்டன் வாழ்க்கை முறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், ஓய்வுக்குப் பிறகு அமைதியை விரும்பியதால் அனைவருக்கும் நிம்மதியாக ஒன்றாக வாழக்கூடிய இடத்தை உருவாக்க விரும்பியதாக கூறுகிறார்.
 
2006ஆம் ஆண்டு திடீரென ஒருநாள் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது, பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் சேர்ந்து வாழும் இடத்தை ஏன் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் வந்ததாம். தனிமை இருக்கக்கூடாது என சிந்தித்த அவர், இங்கிருந்துதான் இந்த தனித்துவமான கிராமத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது என்றார். கார்டியன் அறிக்கையின்படி, இந்த கிராமத்தை நிறுவ ஆன் தோர்னுக்கு 13 ஆண்டுகள் ஆனது.
 
முன்னதாக, 2006ஆம் ஆண்டில், அவரது நண்பர்கள் அனைவரும் ஓய்வுபெற்று, தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்ற போது, ஆன் தோர்ன் தனிமையாக உணர ஆரம்பித்தார். பின்னர் ஆன், அனைவரையும் கூட்டி இந்த நிலத்தை 1.2 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். அப்போது 8 குடும்பங்கள் மட்டுமே இருந்ததால், தங்கள் ஓய்வூதியத்தை முழுவதையும் இதற்காக செலவழித்தனர். இப்போது இது ஒரு முழு கிராமமாக உள்ளது, அங்கு பலர் தங்கள் முழு குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
 
இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள். எல்லோரும் ஒன்றாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் எந்த பணமும் வாங்காமல் கற்பிக்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கின்றனர். ஒன்றாக உணவை சமைக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக நடனமாடி பாடல்கள் கேட்கிறார்கள் என்கிறார் ஆன் தோர்ன்.
 
‘யாரோ சொன்னது எனக்கு நினைவிருக்கிறது- சரி, நாம் கைகளைப் பிடித்துக் கொண்டு குதிக்க வேண்டும் என்று. ஒரு நாள் அந்த கனவு நனவாகியது. நாங்கள் சமூகத்திலிருந்து பிரிந்து இருக்க விரும்பவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை முறை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. இங்கு பார்த்தால் எல்லாரின் முகத்திலும் சிரிப்பு’ என்று ஆன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
 
தேனீ வளர்ப்பதும், மண்பாண்டம் தயாரிப்பதும் இங்குள்ள மக்களின் தொழிலாகும். ஒவ்வொரு நாளும் அதில் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். இங்கு குடியேறிய ஒவ்வொரு வீடும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. தேவைப்படும்போது ஒன்றுக்கொருவர் துணை நிற்கிறோம் என்றார்.
 
ஆன் மேலும் கூறுகையில், கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் நாங்கள் இந்த கிராமத்தில் குடியேறினோம். வெளி உலகில் எல்லோரும் தனித்தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இங்கே அனைவரும் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது புரிந்தது இந்த கிராமத்தின் அற்புதம் என்று ஆன் கூறினார்.