காங்கிரஸ் மத்தியில் சலசலப்பு! வேட்பாளர் திடீர் விலகல்!
ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சுசாரிதா மொகந்தி. இவர் பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என கூறி, தனக்கு காங்கிரஸ் அளித்த வேட்பாளர் வாய்ப்பை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளார்.
மக்களிடம் நன்கொடை பெற்றும், செலவுகளை மிகவும் சிக்கனமாக செய்தும் கூட பிரச்சாரம் செய்ய போதிய பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னால் உரிய முறையில் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மொகந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி வேணுகோபாலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கட்சி நிதியளிக்காததால், பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சி தரப்பிலிருந்து சிலர், தன்னையே செலவு செய்யச் சொல்வதாகவும், கட்சி நிதி கொடுக்காவிட்டால் என்னால் பிரச்சாரம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒடிசாவில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு மே.13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய கட்டங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக சுசாரிதா தெரிவித்துள்ளது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.