தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை! மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்!

May 30, 2024 - 01:09
 6
தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை! மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்!

தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

2,3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இதற்கிடையே, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன் ஜூன் 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.