பாஜகவில் இணைந்த வேட்பாளர்!

Apr 29, 2024 - 22:26
 13
பாஜகவில் இணைந்த வேட்பாளர்!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷப் காண்டி பாம், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றால் கட்ட வாக்குபதிவு மே7-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அக்‌ஷய் காண்டி பாம் இன்று காலை தனது வேட்புமனுவை ராஜினாமா செய்தார்.

இந்தூர் தொகுதிக்கு நான்காம் கட்டத்தில் மே13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் மெண்டோலாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அக்‌ஷய் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட இரண்டு மாற்று வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்‌ஷையை பாஜகவுக்கு வரவேற்பதாக மத்திய பிரதேச அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கைலாஷ் விஜயவர்கியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக சார்பில் இந்தூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக சங்கர் லால்வானி என்பவர் போட்டியிடுகிறார். இதன் முன்னதாக சூரத் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் மனுவில் குளறுபடி இருந்ததால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் 7 சுயேட்சைகள் வேட்புமனுவை திரும்பப் பெற்றதால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி எம்பியாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.