அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்! ஆவணங்களை பறிமுதல் செய்ய கோரிக்கை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை ஆவணங்களை வெளியிட்ட மாஜி பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு செயலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட உயர் கல்வித்துறை அதிகாரிகள், பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர். ஆனால், தங்கவேலு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
இதனிடையே பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரும், பொருளியல் துறை பேராசிரியருமான வைத்தியநாதன் குறித்த வீடியோ ஒன்றை கடந்த இருதினங்களுக்கு முன்பு, மாஜி பதிவாளர் தங்கவேலு வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழகத்தின் விசாரணை ஆவணங்களை திருடி வெளியிட்டதாகவும், மாஜி பதிவாளர் தங்கவேலு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர்கல்வித்துறை செயலருக்கு வைத்தியநாதன் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் வைத்தியநாதன் கூறுகையில், பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அரசிடம் அளித்தேன். இதில், பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள், பெரும்பாலானவை நிரூபிக்கப்பட்டதாகவும், அவரை ஓய்வு பெற செய்யாமல் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் அரசு இருமுறை கடிதம் கொடுத்தது. ஆனால், கடந்த பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில், அவர் என் மீதான புகாரின் விசாரணை தொடர்பான சில படங்கள் மற்றும் வீடியோவினை வெளியிட்டுள்ளார். என்மீதான புகாரில் விசாரணை நடத்தி அறிக்கையினை அரசுக்கு அனுப்பக் கோரியிருந்த நிலையில், விசாரணை இன்னும் முடிவடையாமலும், அரசுக்கு அறிக்கை அனுப்பாமலும் உள்ளது.
ஆனால், மாஜி பதிவாளர் தங்கவேலு, விசாரணை தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் அதை பரப்பிட செய்துள்ளார். மேலும், அரசு சார்பாக அனுப்பிய ஆவணங்களை திருடி சமூக ஊடகங்களுக்கு அதை கொடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க ஆவண திருட்டு ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதுடன், அவரின் லேப்டாப் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்ய வேண்டுமென வைத்தியநாதன் கூறியுள்ளார்.