செந்தில் பாலாஜிக்கு என்னதான் முடிவு?

May 16, 2024 - 01:26
 10
செந்தில் பாலாஜிக்கு என்னதான் முடிவு?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜிக்கு சென்னை ஷெசன்ஸ் கோர்ட், ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஜாமீன் கோரியும் வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும்  உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதையை அடுத்து தொடர்ந்து இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மற்றொரு வழக்கின் முக்கிய விசாரணை இருப்பதால் இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா கோரிக்கை வைத்தார். இதற்கு செந்தில்பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை தாமதப்படுத்தவே அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்கிறது. செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். அவர் 330 நாட்களாக சிறையில் உள்ளார். ஒருவேலை அடுத்த மாதத்திற்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தால்  செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம் வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய நீதிபதிகள் 300 நாட்கள் சிறையில் உள்ளதையெல்லாம் காரணமாக சொல்ல முடியாது. பல விசாரணைக் கைதிகள் 2, 3 ஆண்டுகள் சிறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனு மீதான விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.