நீடிக்கும் மாநில அரசு – ஆளுநர் போர்! பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்கள்!
ஆளுநர் மாளிகைகள் பாலியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே ஆளுநர்களாக இருந்த சென்னா ரெட்டி, பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாட்டை சேர்ந்த சண்முகநாதன், ஆந்திராவில் என்டி திவாரி யை தொடர்ந்து அதே வரிசையில் தற்போது மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப் என்ற அளவில் செயல்பட்டு வந்த காலம் மாறிவிட்டது. இப்போது ஆளுநர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக மாநில அரசுகளின் விவகாரங்களில் தலையிடுவது, உச்சநீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வது என்ற வகையில் ஆளுநர்களும் தலைப்புச் செய்திகளாகின்றனர்.
மற்றொரு பக்கம், பாலியல் சர்ச்சைகளில் ஆளுநர்கள் சிக்கிக் கொள்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதன் முன்னதாக,
கடந்த 1991-96-ல் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி. தமிழ்நாட்டில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆளுநர் சென்னா ரெட்டி தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக சட்டசபையிலேயே கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி. திவாரி ஆந்திராவின் ஆளுநராக இருந்த போது பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாக போட்டோக்கள் வெளியாகின. இது ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கிவிட்டது. இதனால் என்டி திவாரி பதவியை ராஜினாமா செய்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மேகாலயா ஆளுநராக தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். ஆனால் மேகாலயா ராஜ்பவனையே ஆளுநர் சண்முகநாதன் லேடீஸ் கிளப்பாக மாற்றிவிட்டதாக புகார்கள் புயலைக் கிளப்பின. இதனால் பாஜகவும் மத்திய அரசும் அதிர்ந்து போயின. இதனை சமாளிக்கவே முடியாமல் சண்முகநாதன் தமது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டுக்கே திரும்பினார்.
இதனையடுத்து தமிழ்நாட்டு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்த போது இதேபோல பாலியல் சர்ச்சைகள் வெடித்தன. பேராசிரியர் நிர்மலா தேவி இது தொடர்பான விவகாரங்களில் சிக்கி தற்போது 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது மேற்கு வங்க முதல்வர் ஆனந்த போஸ், பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆளுநர் மாளிகையிலேயே பணியாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவரே இந்தப் புகாரை தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே பெரும் மோதல் வெடித்திருக்கிறது. அடுத்து இது குறித்த தகவல் என்னவாக இருக்கும் என்பதை பெரும் சர்ச்சையையும் கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.