பணம் பறிப்பில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த போலீசார்!

Jul 24, 2024 - 22:10
 15
பணம் பறிப்பில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த போலீசார்!

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பணம் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (29). இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் ராஜவேலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ராஜவேல் பணம் தர மறுக்கவே அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.1,300 ஐ பறித்துக்கொண்டு அந்நபர் தப்பிச்சென்றார்.

இதுதொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் ராஜவேல் அளித்த புகாரின்படி, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு தீவிர விசாரணை செய்து வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட பாலாஜி (23) என்ற இளைஞரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த அவர், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.1,300 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஏற்கனவே 2 வழிப்பறி வழக்குகள் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.