நாம் இறந்த பின் எவை நம் பேர் சொல்லும்?

Jul 25, 2024 - 00:02
Sep 9, 2024 - 23:10
 25
நாம் இறந்த பின் எவை நம் பேர் சொல்லும்?

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார் ஒரு பாடலிலே சொல்கிறார்.

 

எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்

 

சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க

 

நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்

 

பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?"

 

எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப்போகும் இந்த உடலை நாம் எப்படியெல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்... சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.

 

இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே

 

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்த தொந்தி

 

நம்மதென்று நாம் இருப்ப – நாய் நரிகள் பேய் கழுகு

 

தம்மதென்று தாம் இருக்கும் தான்

 

இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம். அது பொய்.  நாம் போவது – நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

நாம் இந்த வாழ்க்கையில் எது வேண்டும் வேண்டாம் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நிலையற்ற வாழ்க்கையில் நிலையானது எது என்பது நமக்கே தெரியும். ஆனால் அதை நாம் கடைப்பிடிப்பதே இல்லை அதனால் வரும் விளைவுகளை நாம் அனுபவிக்கும் போதுதான் ஆண்மீகத்தை தேடுகிறோம் அதுவரை நாம் செய்வதை அலட்சியமாக யார் சொன்னாலும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் சென்று கொண்டிருக்கிறோம். உணர்ந்தவர்கள் உன்னத வாழ்க்கையை அடைகின்றனர்.