நீங்கள் ஜெயிக்க வைத்திருந்தால் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் – அன்புமணி ராமதாஸ்

Jul 25, 2024 - 00:56
 15
நீங்கள் ஜெயிக்க வைத்திருந்தால் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் – அன்புமணி ராமதாஸ்

ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது. தமிழ்நாட்டுக்கு இதுதான். கேரளாவுக்கு இதுதான் என்று தனித்தனியே பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் மற்றும் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபமடைந்துள்ளன. தமிழகத்தை திமுக ஆட்சி செய்யும் நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வென்றதால் தான் மத்திய பாஜக அரசு இப்படி நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
 
இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது பற்றி பாமக தலைவர் அண்புமணி ராமதாஸிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அன்புமணி ராமதாஸ் இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட். இந்த 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எதுவும் வந்திருக்காதா? '' என்று பதில் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழ்நாட்டுக்கு என்று தனியாக எதுவும் அறிவிக்கவில்லை'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛தனியாக பெயர் சொல்ல முடியாது. ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது தான். தமிழ்நாட்டுக்கு இதுதான். கேரளாவுக்கு இதுதான்.

கர்நாடகாவுக்கு இதுதான் என்று பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்'' என காட்டமாக கூறினார்.