ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் – நிதின் கட்கரி

Aug 1, 2024 - 20:39
Sep 9, 2024 - 22:14
 14
ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் – நிதின் கட்கரி

ஜிஎஸ்டி வரியினை திரும்ப பெற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

காப்பீடு திட்டங்கள் மீதான வரியை திரும்ப பெற வேண்டும் என மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆயுள் காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

வரி விதிப்பு தொடர்பான ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அவர்கள் முன்வைத்த கோரிக்கையை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் தவணைத் தொகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு தவணைக்கு இது போன்ற வரி விதிப்பது, நம் வாழ்வின் நிச்சயமற்ற சூழலுக்கு வரி விதிப்பதற்கு சமம்.

வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை கருதி, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, ஒருவர் காப்பீடு திட்டத்தில் இணைகிறார்.

அவ்வாறு எடுக்கப்படும் காப்பீடு திட்ட தவணைத் தொகைக்கு வரி விதிப்பது, மூத்த குடிமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இது தவிர, சமூகத்தில் இது தனிநபருக்கும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.

எனவே, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணைத் தொகைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆலோசனைக்கு முன்னுரிமை அளித்து, பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.