தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!

Oct 2, 2024 - 14:58
 2
தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!

நடிகர் சிவகார்த்திகேயன், (எஸ்கே புரொடக்ஷன்ஸ்) என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.

'கனா' படத்தின் மூலம் தயாரிப்புகளை துவக்கிய அவர், அதன்பிறகு டாக்டர், டான், கொட்டுக்காளி உள்ளிட்ட பல, படங்களை தயாரித்துள்ளார்.

இவரின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அது போலியானது எனவும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம் எனவும்,

இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.