ஆர்.எஸ்.எஸ்-ல் தீவிரப்பிடித்தமான தர்மேந்திர பிரதான் யார்?...இவருடைய பின்னணி என்ன?

அப்பாவின் அரசியலையே காலி செய்தவர் என்ற விமர்சனத்திற்கும் ஆளானார்

Mar 13, 2025 - 14:47
 1
ஆர்.எஸ்.எஸ்-ல் தீவிரப்பிடித்தமான தர்மேந்திர பிரதான் யார்?...இவருடைய பின்னணி என்ன?

ஆர்.எஸ்.எஸ்-ல் தீவிரப்பிடித்தமான தர்மேந்திர பிரதான் யார்?...இவருடைய பின்னணி என்ன?

தமிழக அரசையே சர்ச்சைக்கு உள்ளாக்கி, இன்று பேசும் பொருளாகி உள்ள மும்மொழிக்கொள்கை விவகாரம் மக்களவையில், திமுகவினர் அநாகரிகமானவர்கள் என கூறும் அளவிற்கு ஒருவருடைய பேச்சு தான் அரசியல் களத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

திமுகவினரை அநாகரீகமானர்வகள் என கூறி 100 முறை மன்னிப்பு கேட்பதாகவும் கூறிய இந்த தர்மேந்திர பிரதான் யார்?

இவருடைய அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்க்கலாம். 

தமிழகத்தில் திராவிட இயக்கம் எழுச்சி பெற்று ஆட்சி அரியணையில் அமர்ந்து பேரரிஞர் அண்ணாவின் மரணித்திற்கு பிறகு முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற அதே ஆண்டில்,

ஒடிசாவின் கருப்பு வைர நகரம் என அழைக்கப்படும் தாள்சரில் பிறந்தவர் தான் தர்மேந்திர பிரதான்.

இவரது தந்தை தேவேந்திர பிரதான் வாஜ்பாய் அரசில் இணையமைச்சராக இருந்து, ஒடிசா மாநில பாஜக தலைவர், தேசிய பாஜக துணை தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை அலங்கரித்தவர். 

இவரது மகன் என்ற அடையாளத்துடன் கல்லூரியில் நுழைந்த தர்மேந்திர பிரதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி.இன் உறுப்பினராக இருந்து ஒரு கட்டத்தில் தேசிய அளவிலான பொறுப்பைப் பெறும் அளவிற்கு உயர்ந்தார்.

பின்னர், 2000ம் ஆண்டில் தனது சொந்த தொகுதியான ஒடிசாவின் பல்லகாரா தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் போதுதான் முதல்முறையாக அரசியலுக்குள் நுழைந்தார்.

அதைத்தொடர்ந்து, 2004ல் தியோகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அப்பாவின் அரசியலையே காலி செய்தவர் என்ற விமர்சனத்திற்கும் ஆளானார். ஆனாலும், இந்த தேர்தல் பிரதானுக்கு அரசியலில் முக்கிய திருப்புமுனையாக மாறியது.

இதுவரை ஒடிசா மாநில முகமாக அறியப்பட்ட தர்மேந்திர பிரதான் 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு டெல்லிக்கு அறிமுகமானார். அதன் மூலம் டெல்லி தலைமைக்கு தன்னை நெருக்கமானவராக மாற்றிக்கொண்டார்.

அரசியலில் அதிவேக வளர்ச்சியை கண்ட பாஜகவினர் அவரை பின்னுக்கு தள்ள முயற்சித்ததன் விளைவே, 2009ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

ஆனாலும், தேர்தலில் தோல்வியை தழுவிய பிரதானுக்கு டெல்லி மேலிடத்தின் நட்பால் கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியும் தானாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, 2012ல் பீகாரில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், மத்திய பிரதேசத்தில் இருந்து 2வது முறையாக ராஜ்யசபா எம்.பியாக ஆக்கப்பட்டார்.

2014க்கு பிறகு அமித்ஷாவுடன் நெருக்கமான பிரதான், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, முதன்முறையாக பிரதமரான மோடி அமைச்சரவையில் இணையமைச்சர் பதவியை இறுகப்பற்றிக்கொண்ட பிரதான் கட்சிக்கு தாராளமாக நிதி கொடுக்கும் முக்கிய புள்ளியாக மாறினார்.

அமித்ஷாவிடம் இவர் காட்டிய விசுவாசம், மற்றும் நிதி ஆதாரம் என இரண்டும் பிரதானுக்கு இன்றளவும் கை கொடுத்து வருகிறது.

தொடர்ந்து, 2017ல் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.

அதே நேரத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம், சுவச் பாரத் போன்ற திட்டங்களை மோடி தீவிரமாக முன்னெடுக்கவே, அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற்றதற்காக மோடியிடம் தனி பெரும் பாராட்டுக்களை பெற்றார்.

இதன் மூலம் மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக 2021ல் கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் தான் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரமும் அரங்கேறியது.

2024ல் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு மீண்டும் கல்வித்துறையை வழங்கினார் மோடி,

ஆர்.எஸ் கொள்கைகளில் தீவிர பிடிமானமாக இருந்த பிரதான்  அரசியலுக்கு வந்த தொடக்கத்தில் தங்களுடைய கோட்பாடுகளை முன்னெடுக்காமல், படிப்படியாக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்த தொடங்கினார்.

ஒடிசாவின் 22 ஆண்டுகளுக்கும் மேலான பிஜூ ஜனதா தள ஆட்சியை முடித்துவைத்ததில் முக்கிய கருவியாக அறியப்பட்டார்.

இதனால் பிரதானுக்கு டெல்லி மற்றும் நாக்பூரில் இன்றளவும் செல்வாக்கு குறையாமல் உள்ளார்.