சாலை விபத்தில் காயமுற்ற இளைஞரின் இதயம் தானம்: 34 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தம்

Oct 19, 2024 - 18:11
 12

சாலை விபத்தில் காயமுற்ற இளைஞரின் இதயம் தானம்: 34 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தம்

வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞரின் இதயம், எம்ஜிஎம் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரால் தானமாகப் பெறப்பட்டது.
 
குழுவினர் நேற்று காலை வேலூரில் இருந்து இளைஞரின் இதயத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு, காலை 11.07 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டனர். காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயில், கோயம்பேடு வழியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பகல் 12.35 மணிக்கு இதயம் கொண்டுவரப்பட்டது.
 
அங்கு இதய செயலிழப்புக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயது பெண்ணுக்கு, டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தினர்.
 
சாலைப் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், தடையற்ற வழித்தட (கிரீன் காரிடர்) வசதியைப் போக்குவரத்துக் காவல்துறையினர் வழங்கியதால் இதயத்தை விரைவாகக் கொண்டு செல்வது சாத்தியமானது.