இங்க சந்தோஷம் இல்லன்னா எங்க போனாலும் சந்தோஷம் இல்ல…. குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம்….இத கவனமா பின்பற்றுங்க!

குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால், வேறு எந்த தெய்வத்தை சென்று வணங்கினாலும் அதற்கான பலன் கிடைக்காது

Mar 8, 2025 - 14:35
 5
இங்க சந்தோஷம் இல்லன்னா எங்க போனாலும் சந்தோஷம் இல்ல…. குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம்….இத கவனமா பின்பற்றுங்க!

இங்க சந்தோஷம் இல்லன்னா எங்க போனாலும் சந்தோஷம் இல்ல…. குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம்….இத கவனமா பின்பற்றுங்க!

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் 'குலதெய்வங்கள்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியா விட்டாலும், மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று, வழிபட்டு விட்டு வர வேண்டும்.

குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால், வேறு எந்த தெய்வத்தை சென்று வணங்கினாலும் அதற்கான பலன் கிடைக்காது. அதோடு குலதெய்வத்தை வணங்க தவறினால் குலதெய்வ குறை ஏற்படும்.

இந்த குலதெய்வ குறை ஏற்பட்டால் பல விதமான நோய்களால் பாதிக்கப்படுவது, எடுத்த காரியங்கள் அனைத்திலும் தோல்வி, தொழில் நஷ்டம், கடன் சுமை, அலுவலகத்தில் பணி சுமை, நிம்மதி இல்லாத நிலை ஆகியவை ஏற்படும்.

இதனால் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று, வழிபட்டு விட்டு வர வேண்டும்.

குலதெய்வம் தெரிந்தவர்கள் வீட்டில் இருந்தே, பங்குனி உத்திரத்தன்று வழிபட்டு கொள்ளலாம். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருந்து திருநீறு, குங்குமம் ஆகியவற்றை எடுத்து வந்து, தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் நாம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருக்கும். பல தலைமுறைகளாக குலதெய்வம் யார் என்று தெரியாமல், தேடி பார்த்தும் குலதெய்வத்தை தெரிந்து கொள்ள முடியாததால், குலதெய்வத்தை வணங்காமல் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குல தெய்வத்தை வழிபடாத தோஷத்தில் இருந்து விடுபட எளிமையான வழிபாடு ஒன்றை செய்யலாம்.

இந்த நாட்களில் குலதெய்வம் வழிபாடு அவசியம்:

அமாவாசை, பெளர்ணமி ஆகியன குலதெய்வத்தை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாகும். குறிப்பாக பெளர்ணமி திதி வரும் நாட்களில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

சில குலதெய்வங்கள், பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து கும்பிடும் பழக்கம் உடையதாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் அந்த குடும்பங்களை சேர்ந்தவர்களையும் அழைத்துச் சென்று வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.

நாம் எத்தனை பிரபலமான, பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும், எந்த தெய்வத்தை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், அந்த தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும்,

நாம் செய்யும் வழிபாடு, பரிகாரம் ஆகியவற்றிற்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு குலதெய்வத்தின் அருளும், நம்முடைய முன்னோர்களின் ஆசியும் இருக்க வேண்டும்.

குலத்தை காக்கக் கூடிய குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும். 

குலதெய்வங்கள் பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே வழிபாட்டு இடங்களைக் கொண்டிருக்கும். மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை.

சிறிய கோயிலாக அல்லது வெட்ட வெளியிலேயே அமைந்துள்ளதாக தான் இருக்கும். ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கா விட்டாலும் இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோயில்களில் இடம் பெற்றிருக்கும்.

சிலரது குடும்பங்களில் குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களும் குல தெய்வம் கோவிலுக்கு செல்வதையே மறந்திருப்பார்கள்.

வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது குலதெய்வத்தை மறந்தே போய் இருப்பார்கள். இப்படி குலதெய்வத்தை வழிபட மறந்தவர்களின் குடும்பத்தில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும்.

சுப காரிய தடைகள், பணக் கஷ்டம், குழந்தையின்மை, நிம்மதியின்மை போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இப்படி பிரச்சனை இருப்பவர்கள், குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாமல் தடைகளை சந்திப்பவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு செய்யும் முறை:

 குலதெய்வத்திற்கு உகந்த நாளை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

*
பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து, குலதெய்வத்தை, குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதாக நினைத்து மனதார, மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.

*
பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம்.

ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாக இந்த காணிக்கையை வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை அமையவில்லை, எப்போது குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அந்த சமயம் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்' என்று சொல்லி அந்த காணிக்கையை முடிந்து பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

*
இப்படி வருடம்தோறும் உங்களுடைய குலதெய்வத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்களோ, அதை மஞ்சள் துணியில் வைத்து, குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யும் வேண்டுதல்களை செய்துவிட்டதாக நினைத்து, மஞ்சள் துணியை முடிந்து பூஜை அறையில் வைத்தால் போதும் அந்த வேண்டுதல் குலதெய்வத்தை சேர்ந்துவிடும். விரைவில் குலதெய்வம் கோவிலுக்கு நேரில் செல்லும் வாய்ப்பு அமையும்.

*
அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது, இந்த மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கையை குலதெய்வ கோயிலில் சேர்த்து விட வேண்டும்.