உலக நாடுகளே உற்று நோக்கும் அதிபர் ...கடுமையான அரசியலுக்கு இதுதான் காரணம்!

ட்ரம்ப்பின் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகள்

Mar 29, 2025 - 13:51
 3
உலக நாடுகளே உற்று நோக்கும் அதிபர் ...கடுமையான அரசியலுக்கு இதுதான் காரணம்!

உலக நாடுகளே உற்று நோக்கும் அதிபர் ...கடுமையான அரசியலுக்கு இதுதான் காரணம்!

நீண்ட காலமாக அமெரிக்கத் தேர்தல் முறையைக் கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உலக அரசியலையே உற்று நோக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, ட்ரம்பின் நீண்ட நாள் கனவான தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்த தேர்தல் மாற்றங்கள் குறித்தும், சட்ட திட்டங்களுக்கு அதிபர் ட்ர்ம்ப் தீவிரம் காட்டுவதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு, நடந்த தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். தனது தோல்விக்குத் தேர்தல் முறைகேடுகள் தான் காரணம் எனவும் அப்போது டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்துட்ரம்ப்பின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.

தனது ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகையைத் தாக்கியது, அரசின் முக்கிய ஆவணங்களைத் திருடியது, பாலியல் வன்கொடுமை என அதிகமான கிரிமினல் வழக்குகள் ட்ரம்ப் மீது தொடரப்பட்டன.

மிக முக்கியமாக பாலியல் வன்கொடுமை வழக்கில் ட்ரம்ப்புக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது.

இதில், காதில் குண்டு பாய்ந்து காயத்துடன் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இரண்டாவது  படுகொலை முயற்சியிலும் ட்ரம்ப் உயிர் பிழைத்தார்.இத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி,அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டுகுடிமக்கள் அல்லாதவர்கள், தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதைத் தடை செய்யும் மசோதாவைக் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை அங்கீகரித்தது.

ஆனாலும், ஜனநாயகக் கட்சியினரால்  செனட்டில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் மோசமான தேர்தல் முறை குறித்துத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அதிபர் ட்ரம்ப்,தற்போது அமெரிக்கத் தேர்தல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

48 மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன், டி.சி. ஆகிய மாகாணங்கள்தங்கள் வாக்காளர் பதிவுப் பட்டியலை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் குடியரசுக் கட்சியின் தேசியக் குழு சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர்

இந்நிலையில், தான் ட்ரம்ப்பின் இந்த உத்தரவும் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில், வாக்காளர் பதிவுக்குக் குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும் என்றும்தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்புகளை அமல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது என்று கூறியுள்ள அந்த உத்தரவு, வாக்காளர் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்ளவும், தேர்தல் தொடர்பான விஷயங்களில் கூட்டாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் மாகாணங்களை வலியுறுத்துகிறது.

மேலும், இந்த உத்தரவை மீறும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவும் பிரேசிலும்  பயோமெட்ரிக் முறையில்  வாக்காளர் அடையாளத்தைப்  பயன்படுத்துகின்றன என கூறியுள்ள ட்ரம்ப், அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்புகளைச் செயல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில், தபால் வாக்குகள் தேர்தலுக்கு முன்னரே வந்து எண்ணப் பட்டிருக்க வேண்டும் என்றும், இனி தேர்தல் நாளுக்குப் பிறகு வந்த அஞ்சல் வாக்குகள் ஏற்கப் படாது என்று நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி இல்லாத வெளி நாட்டினர், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதை இந்த உத்தரவு தடுக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக அமெரிக்கத் தேர்தல் வாக்களிப்பு படிவத்தில் குடியுரிமை கேள்வி கேட்கப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் தேர்தல்  மோசடிகளுக்கு இந்த உத்தரவு  முற்றுப்புள்ளி வைக்கும் என்று தான் நம்புவதாகவும், அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.