அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது – தவெக தலைவர் விஜய்
வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது

அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது – தவெக தலைவர் விஜய்
கதறல் சத்தம் எப்படி இருக்கிறது என தனது பேச்சை தொடங்கியதுமே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கேள்வி எழுப்பினார்.
திருவான்மியூரில் ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் இன்று தவெக பொதுக் குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், தமிழுக்கு அமுதென்று பெயர். தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராக வேண்டிய அவசியத்தை புரிந்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா குடும்பமும் நன்றாக வாழுறதுதான் தேவை.
ஆனால் ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா?
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.
ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும்.
மத்திய அரசு பாசிஸம் செய்றதுனு சொல்றீங்களே நீங்கள் செய்யுறதும் பாசிச ஆட்சிதானே! நான் என் நாட்டு மக்களை சந்திக்கக் கூடாது என எனக்கு தடை போட நீங்கள் யாரு சார்? நேற்று வந்தவன் முதல்வரா என கேட்கிறீர்கள். அப்போ எனக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது.
அதையும் மீறினால் அது சூறாவளியாகவோ சக்திமிக்க புயலாக மாறும்.
இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரானது. மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே பெயரை சொல்ல எங்களுக்கு பயமா, மத்தியில் ஆட்சி செய்யுறது பாஜகதானே, காங்கிரஸா என்ன, மாநிலத்தில் ஆட்சி செய்யுறது யாரு திமுகதானே, அதிமுகவா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.
இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக. தமிழ்நாடு என்றால் உங்கள் ஏன் ஜி அலர்ஜி.
தமிழ்நாட்டுடன் விளையாடாதீர்கள் பிரதமர் சார், பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழகம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பாஜகவின் திட்டம் என்ன என்பது தெரிந்து விட்டது. தவெக ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் பாதுகாப்போம்.
உழைக்கும் மக்களுக்குத்தான் எப்போதும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாக இருக்கும்.
அடிப்படை கொள்கைகளில் தமிழக வெற்றிக் கழகம் என்றும் உறுதியாக இருக்கும். எங்கள் அரசியலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என விஜய் காட்டமாக பேசியுள்ளார்.